அறிமுகம்

“வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்” என்பார்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் தேவைகளை நோக்கிச் சமூக இயக்கங்கள் எழுகின்றன. அப்படிநம் நாட்டில் எழுந்தவைதான் காங்கிரஸ் பேரியக்கம், பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய அனைத்தும்! கால ஓட்டத்தில் மேலும் செழுமை பெற்ற இயக்கங்களும் உண்டு, நீர்த்துப் போன இயக்கங்களும் உண்டு! எவ்வாறாயினும் தொடர்ந்து பல்வேறு இயக்கங்களின் தேவை நாட்டில் இருந்துகொண்டே இருக்கிறது.

ஓர் இயக்கத்தின் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் தொடர்ச்சியாகவும், கிளைகளாகவும் வேறு பல இயக்கங்கள் எழுவதும் இயல்பே. அவ்வாறு திராவிட இயக்கச் சிந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை மக்களிடம் பரப்பும் நோக்குடன் 2007 ஆம் ஆண்டு உருவான இயக்கம்தான் ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை.’

அதே கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்டு, பேரியக்கங்களான திராவிடர் கழகம் என்னும் சமூக இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தேர்தல் அரசியல் இயக்கமும் இன்னும் வலிவுடன் இருக்கும்போது இன்னொரு இயக்கம் ஏன் என்ற வினா எழலாம். “தஞ்சைப் பெரிய கோயில் இருக்கும்போது, வேறு சின்னச் சின்னக் கோயில்கள் எதற்கு என்று யாரும் கேள்வி கேட்பதில்லையே!” என்பார் மறைந்த அறிஞர் சாலை இளந்திரையன். பேரளவில் பணியாற்றும் இயக்கங்கள் ஒருபுறமிருக்க, ஆங்காங்கு சிறு சிறு குழுக்களாகச் செயலாற்றும் பரப்புரை அமைப்புகளும் தேவையே. அவை தம் தாய் அமைப்புகளுக்குஉரம் சேர்க்குமேயன்றி, ஊறு விளைவிப்பதில்லை.

திராவிட இயக்ககக் கோட்பாடுகளுக்கான தேவைகள் தமிழ்ச் சமூகத் தளத்தில் இன்னும் விரிந்து கிடக்கின்றன. சமூக நீதியை உயிர்க் கொள்கையாகக் கொண்டு, தமிழ் இன, மொழி மேம்பாட்டுடனும், பகுத்தறிவுடனும் அதனை இணைத்து உருவாக்கப்பட்ட அவ்வியக்கத்தின் தேவைகள் இன்று சற்றும் குறையாமல் உள்ளன. சில வேளைகளில் கூடுதலாகத் தேவைப்படுகிறதோ என்றும் தோன்றுகின்றது.

இயக்கங்களின் கருத்துக் பரப்புரைகள் பேரளவிலும், நுண்ணளவிலும் (macro and micro level) நடைபெற்றாக வேண்டும். அந்த நோக்கமே, இப் பேரவையின் நோக்கத்திற்கு அடிப்படைக்கு காரணமாக இருந்தது.வேறு சில துணைக் காரணங்களும் இருக்கவே செய்கின்றன.

திராவிட இயக்கத்தின் தோற்றம், 20ஆம் நூற்றாண்டில், ஆதிக்கச் சக்திகள் பலவற்றையும் நிலைகுலையச் செய்தது.. சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம், சமற்கிருத மொழி ஆதிக்கம் ஆகியவை பெரும் அறைகூவலைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாயின. அதன் விளைவாக அவை அனைத்தும் மறைமுகமாக ஓரணி சேர்ந்தன. உண்மைக் காரணத்தை உரைக்காமல், வேறு வேறு காரணங்களின் அடித்தளத்தில் திராவிட இயக்கத்தை எதிர்க்கத் தொடங்கின.

1940களின் இறுதியிலேயே எதிர் முகாம்கள் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டன. 1950-51இல் நாடு முழுவதும் திராவிட எதிர்ப்பு மாநாடுகளே நடத்தப்பட்டன. பிறகு, திராவிட இயக்கம் தலித் மக்களுக்கு எதிரானது என்னும் பொய்யான குற்றச்சாற்று 1990களின் மத்தியில் எழுந்தது. 2009ஆம் ஆண்டு ஈழத்தின் படுகொலைகளைக் காட்டித் திராவிட இயக்க எதிர்ப்பை வலுவூட்டும் முயற்சிகள் நடந்தன. இப்போதும் கூட, திராவிடம் என்னும் பெயர் தமிழ் இல்லை என்னும் உப்புச் சப்பற்ற கருத்தை முன்னிறுத்தித் திராவிட இயக்கமும், பெரியாரும் தாக்கப்படுகின்றனர்.

இந்தச் சூழலை 2000 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே வரலாற்று அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையிலும் உணர்ந்த போது, இப்படியொரு கருத்துக் பரப்பு அமைப்பிற்கு ஒரு தேவை உள்ளதை அறிய முடிந்தது. அந்தக் காரணத்தினாலும், இப்பேரவை தொடங்கப்பட்டது.

2007 ஜனவரி 22 ஆம் நாள், சென்னனை கலைவாணர் அரங்கில், தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளர், அன்றைய நிதியமைச்சர், இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் இப்பேரவை தொடக்கி வைக்கப்பட்டது.

பேரவைக்கான இதழின் தேவையை உணர்ந்து, அதே ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் நாள் ‘கருஞ்சட்டைத் தமிழர்’ என்னும் மாத இதழைத் தொடங்கினோம். அதனை அன்றையத் தமிழக அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடக்கி வைத்தார். பின்பு அது மாதமிருமுறை இதழாக மாற்றப்பட்டது.

கடந்த 9 ஆண்டுகளாகத் தமிழ் இன, மொழி உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு, உலகத் தமிழர் நலன் ஆகியனவற்றை இலக்குகளாகக் கொண்டு பேரவை செயல்பட்டு வருகிறது.சிவகாசி, திருவாரூர் ஆகிய ஊர்களில் இருபெரும் மாநாடுகளை நடத்தியுள்ளது. திராவிட இயக்கக கோட்பாடுகளை ஒட்டி மூன்று மலர்களையும், மூன்று சிறு வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளது. கணக்கற்ற கருத்தரங்குகளைப் பல்வேறு ஊர்களில் நடத்தியுள்ளது. பல பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. தேவைகளையொட்டிச் சென்னையிலும், பிற ஊர்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ‘டெசோ’ போன்ற கூட்டமைப்புகளில் பேரவை இடம்பெற்றுப் பங்காற்றியுள்ளது. தமிழ்வழிக்க கல்வி போன்றவற்றை வலியுறுத்தி ஊர்திப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாதி அமைப்பைக் கண்டித்தும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து பேரவை போராடி வருகின்றது.

அரசியல் தளத்தில் தமிழ்நாட்டில், தி.மு.க.விற்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல் புரிந்து வருகின்றது. தேர்தல் காலங்களில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நாடு முழுவதும் வாக்குகள் சேகரித்து வருகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில், 23 மாவட்டங்களில் உறுப்பினர்களை பெற்றுத் திகழ்கிறது.

விஞ்ஞானத்தோடு சேர்ந்து ஓடாத எவரும் வீழ்ந்து விடுவார்கள் என்னும் இயற்கை விதியை ஏற்று இப்போது இணையத் தளத்தில் கால் பதிக்கிறது.

சிந்தனை, சொல், செயல் ஆகிய எல்லா நிலைகளிலும் , பேரவை தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்பட உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டி நிற்கின்றது.

சுபவீயின் நிகழ்ச்சி நிரல்