கொள்கை அறிக்கை

பெயர்

அமைப்பின் பெயர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்பதாகும்.

அறிமுகம்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் திராவிட இயக்கம் ஆற்றியுள்ள பங்கும், ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் வரலாற்றுச் சிறப்புடையன.மொழித்துறையில் சமற்கிருதமும், பண்பாட்டுத் துறையில் பார்ப்பனியமும் செலுத்தி வந்த ஆதிக்கத்தைத் திராவிட இயக்கம் நெஞ்சு நிமிர்த்தி நேர்கொண்டு எதிர்த்தது.

தமிழ் இன, மொழி மேம்பாடு, சாதி எதிர்ப்பு, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு, பெண் விடுதலை எனப் பல்வேறு தளங்களில் அதன் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.கால ஓட்டத்தில், ஒரு குறிப்பிட்ட தளத்தில் ஆழக் காலூன்றிப் பணியாற்றும் இயக்கங்கள் பிறந்தன. தமிழியக்கம், பகுத்தறிவு இயக்கம், பெண் விடுதலை இயக்கம் என்று ஒரு துறைக்கு முதன்மை கொடுத்தும், மற்றவற்றை உடன் எடுத்தும் பல இயக்கங்கள் பணியாற்றத் தொடங்கின.

இந்நிலை, வளர்ச்சியே அன்றித் தளர்ச்சி இல்லை. எனினும், அண்மைக் காலமாகச் சில தமிழ் இயக்கங்களிலும், சில தலித் இயக்கங்களிலும் திராவிட இயக்க எதிர்ப்பு, தொடர்ந்து வளர்க்கப்படுகிறது. அதனை எதிர்ப்பு என்று குறிப்பதைக் காட்டிலும் வெறுப்பு என்று குறிப்பதே சரியா இருக்கும்.

திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியதால், தெலுங்கு, கன்னட, மலையாள மக்களின் ஆதிக்கம் இங்கு மிகுதியாகி விட்டதென்றும், திராவிடத்தால் நாம் வீழ்ந்தோம் என்றும் தமிழியக்க உணர்வாளர்களிடையே ஒரு மாயக் கருத்துப் பரப்பப்படுகின்றது. அதேபோன்று, பெரியாரும், திராவிட இயக்கமும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் பாடுபட்டனர் என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதும் செய்யவில்லை என்றும், தலித் இயக்கங்களில் ஒரு சிலரால் தவறான எண்ணம் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

இரண்டு கருத்துக்களிலும் உண்மையில்லை என்பதோடு, அவை இரண்டும் உண்மைக்கு எதிர் மறையானவை என்பதையும் உணர்த்த வேண்டிய சூழலில் நாம் உள்ளோம்.

திராவிடம் என்னும் சொல், மொழி, இனம், நாகரிகம், நிலம் முதலான பலவற்றைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மையே, எனினும் நடைமுறையில் திராவிட இயக்கம் என்பது பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அரசியல் இயக்கம் என்றே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உண்மையும் அதுவே. அகராதிகளும், மொழி ஆய்வும் ஆயிரம் சொன்னாலும் திராவிடன் என்றால், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புத் தமிழன் என்றே இங்கு பொருள்படும். மற்றபடி, திராவிடம் என்பது தமிழுக்கான மாற்றுச் சொல்லே. 1940-களிலேயே திராவிட நாடு என்பது, சென்னையின் சுற்றுப்புறங்களையும் சேர்த்துத் தமிழ் பேசும் பகுதியையே குறிப்பதாகப் பெரியார் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே, திராவிட இயக்கம் தொண்டாற்றியது என்பதை மறுத்து, தாழ்த்தப்பட்டோருக்காகவும் அவ்வியக்கம் ஆற்றியுள்ள பணிகளை விரிவா விளக்கிப் பல நூல்கள் வெளிவந்துவிட்டன.தமிழ் இன உணர்வாளர்களின் திராவிட இயக்க எதிர்ப்பு, கிளை மரத்தில் அமர்ந்து அடி மரத்தை வெட்டுவதாகவும், நட்பு சக்தியைப் பகை சக்தியாகப் பார்ப்பதாகவுமே முடியும். மேலும் திராவிட இயக்க எதிர்ப்பு என்னும் திசை திருப்பலால், பார்ப்பனீய எதிர்ப்பு, முனை மழுங்கிப் போகும்.

எனவே திராவிட இயக்கத்தினை அடித்தளமாகக் கொண்டு, அடுத்தடுத்த தளங்களில் கிளை விரிப்பதே நம்மை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். நாம் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம். இந்தக் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இப்புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கமும், தமிழியக்கமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. மாறாக, அரணானவை. எனவே, திராவிட இய்கத் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் கைக்கோர்த்துச் செயல்படுவதே, தமிழ் இன, மொழி மேம்பாட்டிற்குப் பேருதவி புரியும் என இவ்வமைப்பு உறுதியாகக் கருதுகின்றது.

அதே நேரத்தில், பார்ப்பனியத்தை எதிர்த்து எழுந்த பௌத்தத்திற்குள், பார்ப்பனர்கள் உட்புகுந்து அதன் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது போல், திராவிட இயக்கத்திற்குள்ளும் பார்ப்பன ஊடுருவல்களும், பார்ப்பனத் தலைமையை ஏற்கும் நிலைமையும் ஒரு பகுதியில் ஏற்பட்டுள்ளது. அதனைத் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி என்று நாம் கொள்வதற்கில்லை.

இச்சூழலில், திராவிட இயக்கக் கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்டு, தமிழ் இன, மொழி மேம்பாட்டிற்குப் பாடுபட்டு, மானமும் அறிவும் கொண்ட தமிழகத்தை உருவாக்க, அனைத்து தமிழின உணர்வாளர்களையும், குறிப்பாக இளைஞர்களையும், மாணவர்களையும் இவ்வமைப்பில் இணையுமாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவை இருகரம் நீட்டி அழைக்கின்றது.

நோக்கம்

அ) தமிழ் இன, மொழி மேம்பாட்டுக்குப் பாடுபடுதல்.

ஆ) சமூக நீதி, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலை ஆகிய
கோட்பாடுகளைத் தமிழ் மக்களிடையே உயர்த்திப் பிடித்தல்.

இ) உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், அவர்களின் உரிமைப்
போராட்டங்களுக்கும் என்றும் துணை நிற்றல்.

ஈ) சுற்றுச்சூழல், மனித உரிமைக்காப்பு, அறிவியல் தமிழ் வளர்ச்சி
முதலானவற்றில் கூடுதல் கவனம் செலுத்துதல்.

நட்புச் சக்திகளும் பகையிலக்கு

தமிழிய, பெரியாரிய, மார்க்சிய, தலித்திய, பெண்ணிய அமைப்புகள் அனைத்தையும் நட்பு சக்திகளாகவே இவ்வமைப்பு பார்க்கின்றது. சுற்றுச்சூழல், மனித உரிமை, அறிவியல் வளர்ச்சி அகியவற்றை முன்னெடுக்கும் இயக்கங்களோடும் இவ்வமைப்பு நட்பு பாராட்டும்.

இந்துத்துவ பார்ப்பன இயக்கங்களையும், அனைத்து விதமான ஆதிக்கங்களையும், அறியாமை மற்றும் மூட நம்பிக்கைகளையும் இவ்வமைப்பு தன் பகை இலக்காகக் கொள்ளும்.

சுபவீயின் நிகழ்ச்சி நிரல்